கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள அம்மா புறவழி சாலையில், கடந்த 24 ஆம் தேதி, அதிகாலை 5 மணிக்கு காலைகடன் கழிக்க சென்ற முதியவரை அடித்து, அவரிடமி அவரது இருசக்கர வாகனத்தை பிடுங்கிச்சென்றனர். இது குறித்து முதியவர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், கரூர் நகர் பகுதி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இச்சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் கரூர் - ஈரோடு சாலை அமைந்துள்ள கோதை நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு, மர்ம நபர்கள் இருவர் தப்பித்துச்சென்றதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் சென்றது.
இந்த இரண்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் ஒருவராக இருக்க கூடும் என சந்தேகித்த போலீசார், இருவரையும் பிடிக்க கரூர் வெங்கமேடு, பசுபதிபாளையம், வாங்கல் போலீசாரை வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனைக் கண்ட மர்ம நபர்கள், போலீசாரிடமிருந்து பிடிபடாமல் இருக்க, வாகனத்தை எதிர் திசையில் வேகமாக திருப்பிச்சென்ற பொழுது விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.