கன்னியாகுமரி: குலசேகரம் அருகே முள்ளம்பன்றி தாக்கியதில் ஓடிய புலி, ரப்பர் தோட்டத்தில் பால் வெட்டி கொண்டு இருந்த தொழிலாளி மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவரை தாக்கிவிட்டு அருகில் உள்ள தோட்டத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது. புலி தாக்கியதில் பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து குலசேகரம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பேச்சிப்பாறை அடுத்த ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் அன்னாசிப்பழம் விவசாயம் செய்து வருகிறார். இவர், தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, காக்கச்சல் பகுதியில் வந்துகொண்டிருந்த பொழுது, திடீரென பாய்ந்து வந்த புலி கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெகனை தாக்கிவிட்டு தப்பியுள்ளது. இதில், படுகாயம் அடைந்த ஜெகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து, புலியானது அருகில் உள்ள தனியார் ரப்பர் தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பால் வெட்டிக் கொண்டிருந்த திருநந்திக்கரை பகுதியை சேர்ந்த பூதலிங்கம் (61) என்பவரையும் தாக்கியுள்ளது. இதில், பலத்த காயம் ஏற்பட்ட பூதலிங்கம் கூச்சலிட்டதால், அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பூதலிங்கத்தை தாக்கிவிட்டு ரப்பர் தோட்டத்தின் அருகே பள்ளத்தில் விழுந்த புலி மயங்கியுள்ளது. இது குறித்து, அப்பகுதி மக்கள் குலசேகரம் காவல் நிலையத்திற்கும், வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் மயங்கி இருந்த புலியை சோதனை செய்துள்ளனர். இதில், புலி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்துள்ளது.