திருவண்ணாமலை:கலசப்பாக்கம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று ஊர் திரும்பி கொண்டிருந்தவர்களின் கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளாயுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன், இவரது தனது மனைவி வளர்மதி, மருமகள் ஜெயந்தி, பேத்தி ரிதன்யா மற்றும் கார் ஓட்டுநர் உட்பட 6 பேர் காரில் திருவண்ணாமலை அருகே உள்ள ஊத்தூர் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து கார் திருவண்ணாமலை - போளூர் தேசிய நெடுஞ்சாலை கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது, திருவண்ணாமலையில் இருந்து போளூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் தென்பள்ளிப்பட்டு குறுக்கு இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் வேகமாக வந்துள்ளார்.
இதையும் படிங்க:தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதி விபத்து.. 4 பேர் உயிரிழப்பு!
அப்போது, இளைஞரின் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் பேருந்தை திருப்பியுள்ளார். இதில், எதிர் பாராத விதமாக எதிரே வந்த காரின் மீது பேருந்து மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மரத்தின் மீது மோதி நின்றுள்ளது. இதில், கார் முழுமையாக உருகுலைந்துள்ளது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்த வளர்மதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கலசப்பாக்கம் போலீசார், காரில் பயணம் செய்த வேலு, ஞானசேகரன், ஜெயந்தி, ரிதன்யா ஆகியோரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் ஞானசேகரன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, இந்த விபத்து குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தால் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.