நீலகிரி: கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் கோடை விழாக்களும் களைகட்டி நடந்து வருகிறது. இங்கு நிலவும் குளு, குளு காலநிலையால் தினம்தோறும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்குப் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாகக் கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது.
நுழைவு வாயில் பகுதி முதல் பூங்கா முழுவதும் வைக்கப்பட்டுள்ள உருவங்கள் முழுக்க முழுக்க வண்ண வண்ண ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்டு கண்களுக்கு விருந்தளிப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ரோஜா பூங்காவில், பல வண்ண பூக்களைக் கொண்டு யானை, புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகளின் உருவங்களும் இடம் பெற்றுள்ளன.
ரோஜா கண்காட்சி தொடங்கியதையொட்டி அங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஆயிரக்கணக்கான ரோஜாச் செடிகளில் பல ரகங்களில் ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. மேலும், அரங்குகளிலும் பல வகையான ரோஜா மலர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் கருப்பு நிற ரோஜா சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்த கருப்பு நிற ரோஜாவைக் காண அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும், கண்காட்சியில், குட்டியுடன் கூடிய யானை, மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைத்தனர். வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வகையில் வரையாடுகள், சிட்டுக்குருவிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இவற்றின் அருகே சுற்றுலாப் பயணிகள் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.