திண்டுக்கல்:பழனியில் கி.பி.18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்புப்பட்டயம் கண்டறியப்பட்டுள்ளது. பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த வி.மீனா என்பவரிடம் இந்தப் பட்டயம் உள்ளது. செப்புப் பட்டயத்தை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம் கொடுத்து மீனா அதைப் படித்து விளக்கம் அளிக்கும்படி வேண்டியிருந்தார்.
தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி (Credits - ETV Bharat Tamil Nadu) அதன்படி, செப்புப்பட்டயத்தை ஆய்வு செய்து நாராயணமூர்த்தி கூறியதாவது, "செப்புபட்டயம் சாலிவாகன சகாப்தம் 1691ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இதற்கு இணையான ஆங்கில ஆண்டு 1769 ஆகும். பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் பாளையப்பட்டு ஜமீன்தார் வேலாயுத சின்னோப நாயக்கர் இந்தப் பட்டயத்தை வழங்கியுள்ளார்.
மேலும், பாலசமுத்திரத்தைச் சேர்ந்த கட்டய கவுண்டர் என்பவருக்கு பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள ஓர் இடத்தை சர்வ சுதந்திரப் பாத்தியமாக வழங்கிய செய்தியை இந்த செப்புப்பட்டயம் 10 வரிகளில் தெரிவிக்கிறது. பழனி அடிவாரம் மேற்கு கிரிவீதியில் கிழக்கு மேற்காக 53 முழமும், தெற்கு வடக்காக 67 முழமும் அளவுள்ள இடத்தையும், அதில் உள்ள கல் கட்டடத்தையும் பட்டயம் செய்து கொடுத்திருக்கிறார்.
இந்த செப்புப்பட்டயம் 23.5×16 செ.மீ அளவுடனும், 194 கிராம் எடையுடனும் உள்ளது. பட்டயத்தில் உள்ள எழுத்துக்கள் சிற்றுளி மூலம் கொத்தப்பட்டுள்ளன. இந்தச் செப்புப்பட்டயத்தை பாலசமுத்திரம் பாளையப்பட்டு ஜமீன்தார் வேலாயுத சின்னோப நாயக்கரும், அவர் தாயாதியான ஆயக்குடி பாளையப்பட்டு ஜமீன்தார் ஓவள கொண்டம நாயக்கரும் இணைந்து வழங்கியுள்ளனர்” என தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பட்டியலின பேராசிரியைக்கு துறைத்தலைவர் பதவி வழங்க மறுப்பா? - சேலம் பெரியார் பல்கலையில் புதிய சர்ச்சை!