தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் பெண் ரயில் மேலாளரை தாக்கி பணம் பறித்த சிறுவன் கைது! - Attacks on woman railway manager - ATTACKS ON WOMAN RAILWAY MANAGER

Train Manager Assault Issue: மதுரையில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த பெண் ரயில் மேலாளரை தாக்கிய விவகாரத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம்
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 12:33 PM IST

மதுரை:சேலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற பயணிகள் காலி பெட்டி ரயில் திங்கட்கிழமையன்று சிக்னலுக்காக மதுரையில் வைகை ஆற்று ரயில்வே பாலம் அருகே நின்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் பெண் ரயில் மேலாளர் ராக்கி என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ரயில் மேலாளர் பெட்டிக்குள் திடீரென நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், ராக்கியை தாக்கிவிட்டு அவரது கைபேசி உடமைகளைப் பறித்து சென்றுள்ளனர்.

இதில் காயமடைந்த ராக்கி முதலுதவிக்கு பின்பு ரயில்வே மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், குணமடைந்து மறுநாள் மாலை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே சம்பவம் நடந்தவுடன் ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் கார்த்திகேயன், உதவி ஆணையர் சிவதாஸ், ரயில்வே போலீஸ் துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி ஆகியோர் குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்பு போலீஸ் படையை அமைத்தனர்.

இதைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும் குற்றவாளிகளை வலைவீசித் தேடிவந்தனர். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட 17 வயது சிறுவன், செல்லூர் மார்க்கெட்டில் பிடிபட்டான். அவனிடமிருந்து ரயில் மேலாளரின் மொபைல் போன், வங்கி அட்டைகள் மற்றும் ஆயிரம் ரூபாயை ரயில்வே போலீசார் கைப்பற்றினர். அப்போது, ரயில் மேலாளரிடமிருந்து பறித்துச் சென்ற ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 500 ரூபாயை செலவழித்து விட்டதாகத் தெரிகிறது.

பிடிபட்ட சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் அவரை, அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலில் சம்பந்தப்பட்ட மற்றொரு சிறுவனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பெண் பயணிகள், பெண் ஊழியர்கள் பாதுகாப்புக்காக போதியளவில் ரயில்வே பாதுகாப்பு படை வீராங்கனைகள் மற்றும் ரயில்வே பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெற்கு ரயில்வே மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மதுரை அரசு மருத்துவமனை கழிவுநீர் வைகை ஆற்றில் கலக்கும் விவகாரம்.. பொதுப்பணித்துறை செயலாளர் பதிலளிக்க மதுரை ஐக்கோர்ட் உத்தரவு! - Madurai Govt Rajaji Hospital Sewage

ABOUT THE AUTHOR

...view details