தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அட்சய திருதியை 2024: தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஆயிரம் கோடிக்கு விற்றுத் தீர்ந்த தங்கம்! - TN AKSHAYA TRITIYA SALES 2024 - TN AKSHAYA TRITIYA SALES 2024

TN AKSHAYA TRITIYA SALES: அட்சய திருதியை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் விற்பனையாகியுள்ளது என சென்னை தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

GOLD RELATED IMAGES
தங்கம் தொடர்பான புகைப்படம் (CREDIT - GETTY IMAGES)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 3:25 PM IST

சென்னை:அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பல நூறு ஆண்டுகளாக மக்கள் மனதில் இருக்கிறது. இதனால் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதில் மக்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த ஆண்டு, அட்சய திருதியை நேற்று (மே 10) அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி, இன்று (சனிக்கிழமை) மதியம் 2.50 மணியுடன் முடிவடைகிறது. அட்சய திருதியை முன்னிட்டு, நகைகடைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளும் அறிவித்தன.

கூட்டம் அதிகம் குவியும் என்பதால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகைக் கடைகள் நேற்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் நகைகடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதில் ஒரு சிலர் முன்பதிவு செய்து நகைகளை நல்ல நேரத்தில் வாங்கினர்.

விதவிதமான டிசைன்களில் நகைகள் அட்சய திருதியை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் புது நகைகளையும் சிலர் பழைய நகைகளை மாற்றி புதிய நகைகளையும் அட்சய திருதியை நாளில் தங்களுக்கு பிடித்த தங்கம் மற்றும் வைரம், வெள்ளி நகைகளை ஆர்வத்துடன் வாங்கினர்.

இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்க பொது செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, “சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 45 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகளில் நேற்று கூட்டம் அதிகம் காணப்பட்டது.

கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்கம் உள்ளிட்ட நகைகள் விற்பனை இருந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் 20 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தங்கம் உள்ளிட்ட பல்வேறு நகைகள் விற்பனை நடைபெற்றுள்ளது.

இந்தாண்டு சிறு மற்றும் நடுத்தர அளவிலான தங்க நகைகள் அதிகளவில் மக்கள் வாங்கினர். சென்னையை விட புறநகர் பகுதிகளில் விற்பனை அதிகளவு இருந்தது. இந்தாண்டு 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த விற்பனையானது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகம். அதேபோல் எப்போதும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் தங்கத்தின் தேவைக்கேற்ப மூன்றுமுறை அதன் விலை உயர்த்தப்பட்டது" என்று சாந்தகுமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரியவகை நோய் பாதித்த 2 குழந்தைகளின் உயிரைக் காத்த கோவை அரசு மருத்துவர்கள் - எப்படி சாத்தியமானது? - Kawasaki Disease

ABOUT THE AUTHOR

...view details