சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டமானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை பார்வையிடச் சென்றுள்ளதால், அவரை தவிர்த்து மற்ற அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்தில், 44,125 கோடி ரூபாய் மதிப்பில் 15 புதிய முதலீடு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “15 ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் 24,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வாகன உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், பேட்டரி உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் வாகன உற்பத்தி, மின்னனுப் பொருட்கள், உணவு பதப்படுத்தல், புதுப்பிக்கதக்க எரிசக்தி பொருட்கள், பேட்டரி உற்பத்தி ஆகிய தொழில்கள் குறித்த முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக, தூத்துக்குடியில் செம்காப் நிறுவனம் 21,340 கோடி ரூபாய் முதலீட்டில் 1,114 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், காஞ்சிபுரத்தில் மதர்சன் எலட்ரானிக்ஸ் ரூ.2,600 கோடி முதலீட்டில் 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான திட்டத்திற்கு அனுமதி வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.
இதேபோல, 1,777 கோடி ரூபாய் முதலீட்டில் 2,025 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், ஈரோட்டில் துவங்க உள்ள மில்கி மிஸ்ட் நிறுவனம் மற்றும் கிருஷ்ணகிரியில் 1,597 கோடி ரூபாய் முதலீட்டில் 715 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைய உள்ள கிரீன் டெட் நிறுவனத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இத்துடன் உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கத்திற்கும் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.