சென்னை:இது தொடர்பாகஅரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2024 துணைத்தேர்வுகள் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை மார்ச் 2024 பாெதுத்தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்து தேர்ச்சி பெறாத மாணவர்கள், வருகை புரியாத மாணவர்கள், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களிலும் மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தனித் தேர்வர்களுக்கு கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள மையங்களின் விவரம் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சிறப்புத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் ஜூன் 3ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக 1,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம். அதில், 2023 - 2024ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்களுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.