சென்னை: தமிழகம் முழுவதும் பூத் ஸ்லீப் வழங்கும் பணி 100 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், தமிழகத்தில் தேர்தல் பணிக்காகக் கூடுதலாக 10 கம்பெனி சி.ஆர்.பி.எப் (Central Reserve Police Force) வீரர்களைத் தமிழக டிஜிபி கேட்டுள்ளதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "17ஆம் தேதிக்குள் தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவு பெறும். தமிழகத்தைச் சேர்ந்த 71 ஆயிரம் ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் தபால் மூலமாக வாக்களிக்க உள்ளனர். இவர்கள் தங்களின் வாக்குச் சீட்டுகளைத் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
சர்வீஸ் வாக்காளர்கள் என்று அழைக்கப்படும் ராணுவ வீரர்கள் அனைவரும், வரும் ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு முன்னதாக, தங்களின் வாக்குச் சீட்டுகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வந்து சேரும் வகையில் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் Alphabet வரிசையில் வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.