ஹராரே:சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று (ஜூலை.6) நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணியில் வெஸ்லி மாதவிரே, இன்னசென்ட் கைய்யா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மாதவிரே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், கைய்யா ரன் ஏதுமின்றி ரவி பிஷ்னாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் களமிறங்கிய பிரையன் பென்னட் சிறிது நேரம் மாதவிரேவுடன் இணைந்து விளையாடினார். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி சிறிது நேரத்திற்கு விக்கெட் ஏதும் விழாமல் பார்த்துக் கொண்டது. இருப்பினும் நேர்த்தியான பந்துவீச்சின் மூலம் ரவி பிஷ்னோய் இந்த ஜோடியை கலைத்தார்.
அவரது பந்துவீச்சில் பிரையன் பென்னட் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின் ஜிம்பாப்வே அணியின் விக்கெட் வரிசை படிப்படியாக கலையத் தொடங்கியது. சிறிது நேரம் விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் மாதவிரே 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் சிக்கந்தர் ராசா 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுபுறம் இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். டியான் மையர்ஸ் 23 ரன், ஜோனதன் கேம்பெல் டக் அவுட், விக்கெட் கீப்பர் கிளைவ் மதாந்தே 29 ரன் என ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து அணிவகுப்பு நடத்தினர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைத் தொடர்ந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும், அவெஷ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து இலக்கை துரத்தி இந்திய அணி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு தேர்வு! வெற்றிக் கனியை பறிக்குமா ஜிம்பாப்வே? - Ind vs Zim 1st T20