ஐதராபாத்:இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. முதலில் வங்கதேசத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் மற்றும் நிலவும் வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து அங்கு உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டது. ஆனால் அதற்கு பிசிசிஐ இசைந்து கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளில் ஐசிசி கோப்பைகளை நடத்துவது மற்றும் தற்போது இந்தியாவில் மழைக் காலம் என்பதை காரணம் காட்டி பிசிசிஐ தட்டிக் கழித்தது.
இதையடுத்து, மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியதாக அறிய முடிகிறது. இந்நிலையில், மகளிர் 20 ஓவர் உலக கோப்பை தொடரை நடத்த ஜிம்பாப்வே விருப்பம் தெரிவித்துள்ளது.
2018 மற்றும் 2023ஆம் ஆண்டு உலக கோப்பை தகுதிச் சுற்றை வெற்றிகரமாக நடத்திய நிலையில், நாட்டில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் விதமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே உலக கோப்பை தொடரை நடத்தி இருந்தது.