ஐதராபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று (நவ.23) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று (நவ.23) 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் நிலைத்து நின்று விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
இருவரும் அரை சதம் கடந்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 57 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல். ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புது உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். 22 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்றைய நாளில் 2 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் அவரது டெஸ்ட் சிக்சர்கள் 34 ஆக உயர்ந்தது. நடப்பாண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஜெய்ஸ்வால் 34 சிக்சர்கள் விளாசி உள்ளார்.