அகமதாபாத்: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவது கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.28) மாலை 3.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அதில் 5-ல் தோல்வியும் 4-ல் வெற்றியும் கண்டு புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அதேபோல் பாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிய 9 போட்டிகளில் 7ல் தோல்வியும் 2-ல் மட்டும் வெற்றி கண்டு 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
பெங்களூரு அணி கடைசியாக சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரின் பிளே ஆப் சுற்றில் பெங்களூரு அணி தொடர வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் மட்டுமின்றி இனி வரும் அனைத்து ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் அந்த அணி உள்ளது.
அதேநேரம் குஜராத் டைட்டனஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ள குஜராத் அணி இனி வரும் ஆட்டங்களில் வென்றால் மட்டும் பிளே ஆப் சுற்றில் நீடிக்க முடியும். அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.