ஐதராபாத் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.25) இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பெங்களுரூ அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 1ல் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்று உள்ளது. மீதமுள்ள 7 ஆட்டங்களிலும் அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
கடைசியாக கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது. பெங்களூரு அணியை பொறுத்தவரை தொடக்க வீரர் விராட் கோலி, கேப்டன் பாப் டு பிளெசிஸ், வில் ஜேக்ஸ், ரஜத் படிதர், மிடில் வரிசையில் தினேஷ் கார்த்திக் என பேட்டிங் வலிமையாக காணப்பட்டாலும் பந்துவீச்சு தான் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான அட்டத்தில் மட்டும் யாஷ் தயால், முகமது சிராஜ், லாக்கி பெர்குசன் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து எதிரணி 200 ரன்களை எளிதில் கடக்க உதவினர். இனி வரும் ஆட்டங்களில் ஒன்றில் கூட தோல்வியை கண்டிராமல் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்கக் கூடிய சூழலில் பெங்களூரு அணி உள்ளது.
மற்றொரு புறம் சன்ரைசஸ் ஐதராபாத் அணி நடப்பு சீசனில் வெளுத்து வாங்கி வருகிறது. மூன்று முறைகளுக்கு மேல் 200 ரன்களை கடந்து பேட்டிங்கில் ஐதராபாத் அணி வலுவாக காணப்படுகிறது. அதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரையிலும் ஐதராபாத் அணி வலிமையாகவே உள்ளது.