பெங்களூரு: மகளிர் கிரிக்கெட் பிரீமியர் லீக்கின் 2வது சீசன் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் 2வது போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உபி வாரியர்ஸ் அணிகள் சின்னசாமி ஸ்டியத்தில் மோதின. இதில், டாஸ் வென்ற உபி வாரியர்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்களான கேப்டன் ஸ்மிருதி மந்தனா - டிவினி ஜோடி களமிறங்கியது. வந்த வேகத்தில் டிவினி எல்பிடபிள்யூ ஆனார். பின் சப்பினேனி மேகனா களம் கண்டார். இந்நிலையில் ஸ்மிருதி மந்தனா வெறும் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் எல்லிஸ் பெர்ரி களம் கண்டார். இவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து 8 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். 8 ஓவர் முடிவிற்கு 55-3 என்ற கணக்கில் விளையாடியது.
களத்தில் சப்பினேனி மேகனாவுடன் ரிச்சா கோஷ் கை கோர்த்தார். இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி தனது அணிக்கு ரன்களை குவித்தனர். 14வது ஓவரில் ரிச்சா கோஷ் தொடர்ந்து ஹெட்ரிக் பவுண்டரி விளாசினார். இருவரின் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் குவிந்தன. மேலும், சப்பினேனி மேகனா தனது அரைச் சதத்தையும் பதிவு செய்தார்.
களத்தில் இருவரும் மாறி மாறி பவுண்டரியை விளாசினர். 17வது ஓவரில் மேகனா போல்ட் ஆனார். 44 பந்துகளுக்கு 53 ரன்களை குவித்தார். பின் வந்த வேர்ஹாம் சொற்ப ரன்களில் அவுட் ஆனார். பின், மோலினக்ஸ் களம் கண்டார்.
18வது ஓவரில் ரிச்சா கோஷ் மீண்டும் ஹெட்ரிக் பவுண்டரியை விளாசி தனது அரைச் சதத்தைப் பதிவு செய்தார். பின் ரிச்சா கோஷ் 62 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். அதன்பிறகு, ஸ்ரேயங்கா பாட்டீல் சோஃபி களமிறங்கி விளையாடினார். 20ஓவர் முடிவிற்கு 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் கயக்வாட் 2 விக்கெட்களையும், கிரேஸ் ஹாரிஸ், தஹ்லியா மெக்ராத், எக்லெஸ்டோன், தீப்தி சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.