ஐதராபாத்:நியூசிலாந்து அணி வரும் 16ஆம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (அக்.11) அறிவித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த முறையும் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷமி நிச்சயம் அணியில் இடம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இருப்பினும், அவர் அணிக்கு திரும்பாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணியில் முகமது ஷமி கடைசியாக விளையாடி இருந்தார்.
அதன்பின் ஏறத்தாழ ஒராண்டு காலமாக அவர் அணியில் இடம் பெறவில்லை. கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமி, தற்போது பெங்களூரு உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், உடற்தேர்வின் போது முகமது ஷமிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. நியூசிலாந்து தொடரை தொடர்ந்து இந்திய அணி நவம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.