அடிலைட் (ஆஸ்திரேலியா) :ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த மாத இறுதியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலைடில் இன்று துவங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதவில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்ததையடுத்து, 44.1 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு தக்க பதிலடி தந்தே ஆக வேண்டும் என்ற வேகத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று அடிலைடில் களமாடியது காண முடிந்தது. அத்துடன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் களத்தில் இருந்தபோது, தங்களது ஜெர்சியுடன், இடதுகையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்ததும் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
மறைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்களான ஃபிலிப் ஹியூ, இயன் ரெட்பாத் ஆகியோரின் நினைவை போற்றும் விதத்தில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் போட்டியில் எதிரணி வீரர் வீசிய பவுன்சர் பந்து தலையில் பலமாக பட்டதன் விளைவாக ஹியூ உயிரிழந்தார். அவர் மறைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவரது 10 ஆம் ஆண்டு நினைவை, அடிலைட் டெஸ்ட் போட்டியின்போது அனுசரிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அண்மையில் முடிவு செய்திருந்தது.