தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாரீஸ் ஒலிம்பிக் கோலாகல தொடக்க விழா! முதல் நாளில் என்னென்ன நடக்கும்? - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா இன்று தொடக்க விழாவுடன் வெகு விமரிசையாக தொடங்க உள்ளது. தொடக்க விழாவில் என்னென்ன சிறப்புகள் உள்ளன. இந்தியா தரப்பில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்...

Etv Bharat
Paris Olympics 2024 (AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 7:17 AM IST

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (ஜூலை.26) 33வது ஒலிம்பிக் தொடர் கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்குகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தியாவை பொருத்தவரை இந்த ஒலிம்பிக் திருவிழாவில், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், வில்வித்தை, ஹாக்கி உள்ளிட்ட 16 விளையாட்டுகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும் மாற்று வீரர்கள் உள்பட மொத்தம் 117 பேர் கொண்ட இந்திய அணி பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கிறது.

கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி 7 பதக்கங்களை வென்று இருந்தது. இந்த முறை இரட்டை இலக்கத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதனை மன்னன் நீரஜ் சோப்ரா மீண்டும் பதக்கம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்பிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் முறையாக அறிமுகமாகும் பிரேக்கிங் என்ற போட்டி நடனம் மற்றும் சாகச அசைவுகளை உள்ளடக்கியது. இந்த போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. வழக்கமாக, ஒலிம்பிக் போட்டிக்காக தனி நகரமே உருவாக்கி, புதிதாக மைதானங்கள் கட்டப்படும்.

ஆனால், பாரிசில் ஏற்கனவே உள்ள 95 சதவீத விளையாட்டு அரங்கங்களிலும், தற்காலிக மைதானங்கள் அமைத்தும் போட்டிகளை நடத்த பிரான்ஸ் ஒலிம்பிக் சங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய கட்டுமானங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் தொடரை முன்னிட்டு இன்று (ஜூலை.26) பிரம்மாண்ட் தொடக்க விழா நடைபெற உள்ளது. பாரீசில் திறந்தவெளி அரங்கில் ஒலிம்பிக் தொடக்க விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக, திறந்தவெளியில் தொடக்க விழா நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தெந்த நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கள் தேசியக் கொடியை ஏந்தி, சென் நதியில் படகில் 6 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து செல்ல உள்ளனர். தொடக்க விழா நிறைவு நிகழ்ச்சிகள் டொரக்கடேரோ என்ற இடத்தில் நடைபெற உள்ளன. அங்கு ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு, போட்டிகள் முறைப்படி தொடங்கும்.

இந்திய நேரப்படி பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா இன்று இரவு 11 மணிக்கு தொடங்க உள்ளது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தொடக்க விழாவை மைதானத்தில் இல்லாமல், பாரீசின் புகழ்பெற்ற சென் நதி கரையில் நடத்தப்படுவதால் அப்பகுதியே விழாக் கோலம் பூண்டு இருக்கிறது. 2021ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 32வது ஒலிம்பிக் போட்டியில் கரோனா காரணமாக பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த முறை தொடக்க விழா உள்பட அனைத்து போட்டிகளிலும் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதால் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா மேலும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென் நதியில் நடைபெறும் தொடக்க விழாவில் முதல் நாடாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் அணிவகுப்பை தொடங்க உள்ளது.

கடைசி நாடாக போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணியினர் வலம் வர உள்ளனர். அகர வரிசைப்படி அணிவகுப்பில் இந்திய அணி 84வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்திய ஒலிம்பிக் அணியை தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆகியோர் தேசிய கொடி ஏந்தி வழிநடத்திச் செல்கின்றனர்.

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் எதிரில் உள்ள டிரோகேட்ரோ பகுதியில் கலை நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுகிறது. ஏறத்தாழ 3 மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்படும் வண்ணமயமான தொடக்க விழாவில், 3 ஆயிரம் கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

மேலும், பிரான்ஸ் விமானப் படையின் வான் நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரி, நடனம், லேசர் மற்றும் டிரோன் ஜாலங்கள் என சிலிர்க்க வைக்கும் அளவுக்கு வாணவேடிக்கைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. முன்னதாக ஒலிம்பிக் தொடக்க விழாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கிறார். முதல் நாளில் எந்த விளையாட்டுகளும் இல்லாத நாளில் நாளை (ஜூலை.26) முதல் போட்டிகள் தொடங்குகின்றன.

இதையும் படிங்க:ஆரம்பமே அட்டகாசம்.. வில்வித்தையில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி! - paris olympics 2024

ABOUT THE AUTHOR

...view details