சென்னை:17வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் ஓப்பனிங்கில் களமிறங்கிய விராட் கோலி 6 ரன்கள் எடுத்தபோது, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
இதன்மூலம், டி20 கிரிகெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார், விராட் கோலி. அதேபோல், நேற்றைய போட்டியில் 21 ரன்கள் எடுத்து கோலி ஆட்டமிழந்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற மற்றொரு மைல் கல்லையும் கோலி எட்டியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான விராட் கோலி பல்வேறு சமயங்களில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியடித்து வரும் கோலி, தற்போது 12 ஆயிரம் ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.