வாஷிங்டன்: அமெரிக்காவில் அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். அடுத்த ஆண்டு முறைப்படி அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ளும் பணியில் தற்போது உள்ள ஜோ பைடன் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதனிடையே ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பாளர்களை டொனால்டு டிரம்ப் நியமித்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்க கல்வி அமைச்சராக பிரபல WWE மல்யுத்த விளையாட்டின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி லிண்டா மெக்மஹோனை பரிந்துரைத்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் நீண்ட கால நண்பராக லிண்டா மெக்மஹோன் அறியப்படுகிறார். பிரபல மல்யுத்த விளையாட்டான WWE-ல் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த லிண்டா மெக்மஹோன் கடந்த 2009ஆம் ஆண்டு அதில் இருந்து வெளியேறி சொந்தமாக தொழில் செய்யத் தொடங்கினார்.
டொனால்ட் டிரம்பின் முந்தைய 2017- 2019 ஆட்சிக் காலத்தில் சிறு வர்த்தக தொழிலை லிண்டா மெக்மஹோன் கவனித்து வந்தார். அதைத் தொடர்ந்து இரண்டு முறை கனெக்டிகட் மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2009ஆம் ஆண்டு கனெக்டிகட் கல்வி அமைச்சகத்தில் சிறிது காலம் பணியாற்றி உள்ளார்.