டெல்லி:2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்லுமா? இல்லையா? என்பது தான் பெரும் கேள்வியாக உள்ளது. டிசம்பர் மாதத்தில் இருந்து ஐசிசியின் புதிய தலைவராக ஜெய்ஷா பொறுப்பேற்பதால் இந்திய அணியை தங்கள் நாட்டுக்கு வரவழைப்பது பாகிஸ்தானுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
பாகிஸ்தான் சாம்பியன்:
கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து வேல்சில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
தீவிரவாத தாக்குதல்:
கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அங்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. கடந்த ஆண்டு கூட பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்ற நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஹபிரிட் மாடலில் இலங்கையில் நடத்தப்பட்டது.