திருநெல்வேலி:8வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சேலத்தில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 11லீக் போட்டிகள் அங்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2ம் கட்ட லீக் போட்டிகள் கோயம்புத்தூரில் தொடங்கியது.
அங்கு 8 லீக் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்தநிலையில் 3ம் கட்ட லீக் போட்டிகள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 18வது லீக் போட்டியில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் - ஆண்டனி தாஸ் தலைமையிலான திருச்சி கிராண்ட் சோலஸ் அணிகள் எதிர் கொண்டது.
178 இலக்கு: திருநெல்வேலி உள்ள இந்திய சிமெண்ட்ஸ் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு தொடங்கிய, இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது.
இதில் கேப்டன் அருண் கார்த்திக் 51 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 84 ரன்கள் விளாசினார். இவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் ரித்திக் ஈஸ்வரன் 23 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். மற்ற 7 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.
திருச்சி அணி தரப்பில் சரவண குமார் 4 விக்கெட்டுகளையும், அதிசயராஜ் டேவிட்சன் மற்றும் ஆண்டனி தாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.