ஐதராபாத்: தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை 4 ஆண்டுகள் தடை செய்து கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி தேசிய அணிக்கான தேர்வு போட்டியின் போது ஊக்கு மருந்து சோதனைக்கு மாதிரிகள் வழங்க மறுத்ததை தொடர்ந்து இந்த தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஊக்க மருந்து சோதனைக்கு மாதிரி வழங்க மறுத்ததை தொடர்ந்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் பஜ்ரங் புனியாவை கடந்த ஏப்ரல் 23ஆம் தேடி இடை நீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து உலக மல்யுத்த கூட்டமைப்பும் பஜ்ரங் புனியாவை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இடை நீக்கத்தை எதிர்த்து பஜ்ரங் புனியா தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் முறையீடு செய்தார்.
இதையடுத்து பஜ்ரங் புனியா மீதான குற்றச்சாட்டு அறிக்கையை தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் வெளியிடும் வரை இடை நீக்கத்தை ரத்து செய்வதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் நோட்டீஸ் வழங்கியது.