சேலம்:டிஎன்பிஎல் 8வது சீசன் சேலத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 7வது லீக் போட்டியில் ஆண்டனி தாஸ் தலைமையிலான திருச்சி கிராண்ட் சோழாஸ், ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர் கொண்டது.
சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய திருச்சி அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக, அர்ஜுன் மூர்த்தி மற்றும் வசீன் அகமது ஆகியோர் களமிறங்கினர்.
இதில் அர்ஜுன் மூர்த்தி 5 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேற, அடுத்து வந்த ஷியாம் சுந்தர் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சய் யாதவ் - வசீன் அகமதுடன் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
வசீம் அகமது, சஞ்சய் யாதவ் அதிரடி:இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் வசீன் அகமது 55 பந்துகளில் 90 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் இணைந்து ஆடிய சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களை குவித்தது திருச்சி கிராண்ட் சோழாஸ். நடப்பு டிஎன்பில் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.