ஐதராபாத்:தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. நேற்று (நவ.15) ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்ற 4வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (109 ரன்) மற்றும் திலக் வர்மா (120 ரன்) ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். குறிப்பாக திலக் வர்மா அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 47 பந்துகளில் 10 சிக்சர், 9 பவுண்டரி என திலக் வர்மா விளாசித் தள்ளினார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 ஆட்டங்களில் இரண்டு சதங்கள் உள்பட திலக் வர்மா மொத்தம் 280 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இரு தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் திலக் வர்மா படைத்தார். இதற்கு முன் இந்திய அணியின் ரன் இயந்திரமான விராட் கோலி இந்த சாதனையை படைத்து இருந்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விராட் கோலி 3 அரை சதங்களுடன் 231 ரன்கள் குவித்து இருந்தார். தற்போது இந்த சாதனையை திலக் வர்மா முறியடித்துள்ளார். இதன் மூலம் ஒரு நாட்டுக்கு எதிரான டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி திலக் வர்மா - சஞ்சு சாம்சன் ஆகியோரின் அபார் கூட்டணியின் மூலம் 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்த இந்தியாவின் வேகம் மற்றும் சுழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆல் அவுட் ஆனது.
18.2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், ரமண்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க:இந்தியா வரும் Champions Trophy கோப்பை! எப்ப.. எங்க தெரியுமா?