ஐதராபாத்:ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது ஓய்வை அறிவித்தனர். இன்ஸ்டாகிராமில் வெளியான பதிவு சில விநாடிகளில் 100 கோடிக்கும் அதிகமான மக்களை அதிர்ச்சிக்குள்ளானது. காணும் திசை எல்லாம் இரண்டு வீரர்கள் ஓய்வு பெற்றது குறித்த பேச்சுக்களே எதிரொலித்தன.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா பல சாதனைகளை புரிய இருவரும் தங்களது தாராள பங்களிப்பை வழங்கியவர்கள். நட்புக்கு இலக்கணமான அவர்கள் இருவரும் மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஆவர். களத்திலும், மைதானத்திற்கு வெளியிலும் சரி நட்புக்கு உதாரணமாக திகழ்ந்த இருவரும் அதை பின்பற்றும் வகையில் அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.
தனது சுயசரிதையில் தோனி குறித்து குறிப்பிட்டுள்ள சுரேஷ் ரெய்னா, 2005ஆம் ஆண்டு துலிப் கோப்பை மூலம் இருவரும் நட்பானது குறித்து குறிப்பிட்டுள்ளார். 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துலிப் கோப்பையில் தோனியை முதல் முறையாக சந்தித்ததாகவும், அவரது ஆட்டத் திறன், நம்பிக்கை, விளையாட்டை எளிதாக கையாளும் சக்தி உள்ளிட்டவற்றை கண்டு ஈர்த்ததாகவும் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து இந்திய சீனியர் அணி சார்பில் பெங்களூருவில் நடத்தப்பட்ட விளையாட்டு முகாமில் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டதாகவும், அங்கிருந்து இருவரது நட்பும் நீண்ட நெடிய பயணங்களுக்கு வழிவகுத்ததாகவும் ரெய்னா குறிப்பிட்டுள்ளார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த போதும், இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து பல போடிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே தோனியை தல என்றும் சுரேஷ் ரெய்னாவை சின்ன தல என்றும் ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக மகேந்திர சிங் தோனி தனது கடைசி ஆட்டத்தில் விளையாடினார். அதன் பின் ஒராண்டு காலம் சர்வதேச கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கியே இருந்த தோனி, சரியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி 2020ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்.