டுரின்: உலக டென்னிஸ் தரவரிசையில் டாப் 8 இடங்களில் இருக்கும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு முன்னணி வீரர்கள் மட்டும் கலந்து கொள்ளும் ஏடிபி டென்னிஸ் இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதிச் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சிவெரேவ் - அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் என்பவருடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெய்லர் பிரிட்ஸ் ஆட்ட முடிவில் 6-க்கு 3, 3-க்கு 6, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் சிவெரேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் ஏடிபி ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அமெரிக்க வீரர் என்ற வரலாற்று சாதனையை டெய்லர் பிரிட்ஸ் படைத்தார். மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த ஜன்னிக் சின்னர், நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த ஜன்னிக் சின்னர், எதிரணி வீரர் கேஸ்பர் ரூட்டுக்கு வாய்ப்பு கொடுக்காமல் கடும் நெருக்கடி அளித்து வந்தார். இதனால் தொடக்கத்திலேயே ஜன்னிக் சின்னர் தான் இறுதிப் போட்டிக்கு நுழைவார் என ஏறக்குறைய உறுதியானது.