ஐதராபாத்:இந்திய பொருளாதாரத்தின் தூண்களின் ஒன்று என அனைவராலும் போற்றப்படும் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா நேற்று (அக்.9) இரவு காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கஒப்பட்டு இருந்த நிலையில், ரத்தன் டாடாவின் உயிர் பிரிந்தது.
தொழில்துறை, சமூக செயற்பாடு, ஏழை எளியோருக்கு உதவுதல் என பன்முகம் கொண்டவராக அறியப்பட்ட ரத்தன் டாடா விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டு இருந்தார். குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டின் அதிக ஆர்வம் கொண்டவராக ரத்தன் டாடா அறியப்படுகிறார். கிரிக்கெட் விளையாட்டில் டாடா குழுமமும் அதிக ஆர்வம் காட்டியுள்ளதை அறிய முடிகிறது.
டாடா குழுமமும் விளையாட்டும்:
இது தவிர டாடா குழுமத்தின் தலைவரான ஜம்ஷெட்ஜி டாடாவின் பெயரில் 1991 ஆம் ஆண்டு ஜம்ஷெட்பூரில் உலக தரம் வாயந்த பன்னோக்கு விளையாட்டு மையமும் டாடா குழுமத்தால் நிறுவப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மையம் ஹாக்கி, வில்வித்தை, தடகளம் உள்ளிட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சிக் களமாக இயங்கி வருகிறது.
பல்வேறு 20 ஓவர் கிரிக்கெட் லீக் தொடர்களுக்கு நிதி உதவி அளித்தும் ஸ்பான்சர்ஷிப் எடுத்தும் டாடா குழுமம் தற்போது வரை நடத்தி வருகிறது. மேலும் 1996 ஆம் ஆண்டு டைட்டன் கோப்பை கிரிக்கெட் தொடரை டாடா குழுமம் அறிமுகப்படுத்தியது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா என முத்தரப்பு வடிவில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி வெற்றி வாகை சூடியது.
கிரிக்கெட் ஸ்பான்சரை நிறுத்த காரணம் என்ன?
இருப்பினும் 1990களின் கடைசி மற்றும் 2000 தொடக்க காலக்கட்டங்களில் டாடா குழுமம் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து பின் வாங்கத் தொடங்கியது. கிரிக்கெட் தொடர்கள் நடத்துவது, சில வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை டாடா குழுமம் முற்றிலுமாக நிறுத்தியது.
1990 மற்றும் 2000 காலக்கட்டங்களில் கிரிக்கெட் விளையாட்டில் நடந்த பெரும் ஊழல்கள், அதில் ஈடுபட்டு வெளி உலகத்திற்கு தெரிய வந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள் என அடுத்தடுத்த கிரிக்கெட் விளையாட்டின் மீதான அவப்பெயர் காரணமாக அவ்விளையாட்டை ஊக்குவிக்கும் முனைப்பை டாடா குழுமம் கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின் ஐபிஎலில்..
அதன் பின் நீண்ட நாட்களுக்கு பின் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஸ்பான்சர்ஷிப் செய்ய டாடா நிறுவனம் முனைப்பு காட்டியது. அதிலும், பிசிசிஐ நேரடியாக தலையிட்டு நடத்திய ஐபிஎல், மகளிர் பிரிமீயர் லீக் ஆகிய தொடர்களில் மட்டுமே டாடா குழுமம் அதிக தொகை கொடுத்து ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றியது.
2020ஆம் ஆண்டு சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோவின் (VIVO) ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் முடிவுக்கு வந்ததை அடுத்தும், இந்தியா - சீனா இடையிலான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பை டாடா நிறுவனம் கைப்பற்றியது. தொடந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என அதிகபட்ச தொகை கொடுத்து டாடா குழுமம் அடுத்த 4 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றியது.
இது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்பான்சர்ஷிப் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் டாடா குழுமத்தின் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் நடைபெற உள்ளது. இது தவிர பிசிசிஐ நடத்தும் மகளிர் பிரீமியர் லீக்கின் ஸ்பான்சர்ஷிப்பை கடந்த 2023ஆம் ஆண்டு டாடா நிறுவனம் கைப்பற்றியது. 2027ஆம் ஆண்டு வரை டாடா குழுமம் ஸ்பான்சர்ஷிப்பை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கிரிக்கெட்டும் - ரத்தன் டாடாவும்! டாடா குழுமத்தில் பணியாற்றிய கிரிக்கெட் வீரர்கள்! Cricketers worked TATA Group!