ஆன்டிகுவா:ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதை போல், ஐசிசியின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியது, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொருபுறம், ரசிகர்கள் வியக்கத்தக்க வகையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது அமெரிக்கா. இது அந்த அணியின் கூட்டு முயற்சிக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி என கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தற்போது குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. 20 அணிகள் பங்கேற்ற நடப்பு உலகக் கோப்பை தொடரில் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு அதாவது 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் 2ல் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த நிலையில் இன்று சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் அமெரிக்கா- தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆன்டிகுவா நார்த் சவுண்ட்டில் உள்ள 'சர் விவியன் ரிச்சர்ட்ஸ்' மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டியானது தொடங்குகிறது. வலுவான பாகிஸ்தான் அணியை லீக் சுற்றுடன் வீட்டிற்கு அனுப்பிவிட்டு சூப்பர் 8 சுற்றுக்குள் மாஸாக நுழைந்து இருக்கும் அமெரிக்கா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.