நியூயார்க்: 9வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நேற்று (ஜூன் 2) தொடங்கி, வருகிற ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற போட்டிகளில் கனடா அணிக்கு எதிராக அமெரிக்கா அணியும், பப்புவா நியூ கினியா அணிக்கெதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று நியூயார்க் நகரில் நடைபெறும் Group D பிரிவு போட்டியில் இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.
இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் டி20-இல் இதுவரை 17 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 12 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியும், இலங்கை 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. போட்டி நடைபெறும் அமெரிக்காவின் நியூயார்க் மைதானம் ஓரளவு பெரிய மைதானம் என்பதால், பேட்ஸ்மென்களுக்கு சவாலாக இருக்கும் என்பது பவுலர்களுக்கு ஆறுதலான செய்தி. இலங்கை அணியை விட பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்கா அணி சற்று பலமாகவே உள்ளது.
டேவிட் மில்லர், கிளாசென், ஸ்டப்ஸ் ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்து நல்ல ஃபார்மில் உள்ளனர். குவிண்டன் டி காக் ஃபார்மில் இல்லாதது தென் ஆப்பிரிக்கா அணிக்கு பின்னடைவாகும். பவுலிங்கை பொறுத்தவரை, ரபாடா, நார்கியா, ஷம்சியா ஆகியோர் நன்றாக பந்து வீசும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்கா அணி எளிதில் வெற்றி பெறும்.