காலே: நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் காலேவில் கடந்த 26ஆம் தேதி இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செய டி சில்வா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
602 ரன்களில் டிக்ளேர்:
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 116 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 182 ரன்களும், விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ் 106 ரன்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 88 ரன்களும் விளாசினர்.
கமிந்து மற்றும் குசல் மெண்டிஸ், திணேஷ் சண்டிமால் ஆகியோரின் அபார ஆட்டத்தால் இலங்கை அணி இமாலய இலக்கை நியூசிலாந்து அணிக்கு நிர்ணயித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இலங்கை பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடுமையாக திணறினர்.
ஒற்றை இலக்கில் நியூசிலாந்து வீரர்கள் அவுட்:
நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா (10 ரன்), டேரி மிட்செல் (13 ரன்), மிட்செல் சான்ட்னர் (29 ரன்) ஆகியோர் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. மோசமான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 39.5 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணியை பொறுத்தவரை பிரபத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைத் தொடர்ந்து நிஷன் பெர்ரீஸ் 3 விக்கெட்டும், அஷித் பெர்னான்டோ 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 514 ரன்கள் பின்தங்கிய நிலையில், பாலோ ஆன் ஆன நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது.
போராடி தோற்ற நியூசிலாந்து:
இரண்டாவது இன்னிங்சிலும் இலங்கை வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் தடுமாறினர். தொடக்க வீரர் டெவன் கான்வே (61 ரன்) சிறிது நேரம் போராடினார். அவருக்கு உறுதுணையாக முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சனும் (46 ரன்) சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடினார்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. கடைசி கட்டத்தில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் டாம் பிளண்டல் 60 ரன், கிளென் பிலிப்ஸ் 78 ரன், மிட்செல் சான்டனர் 67 ரன் ஆகியோர் பொறுப்பை உணர்ந்து நிலைத்து நின்று விளையாடி ஆட்டமிழந்தனர். இருப்பினும் நியூசிலாந்து அணியின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.
இலங்கை வரலாற்று வெற்றி:
கடைசியில் 81.4 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 360 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இலங்கை அணி இன்னிங்ஸ் மட்டும் 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்த நியூசிலாந்து அணி, கடந்த சில ஆண்டுகளுக்கு பின் மோசமான தோல்வியை பெற்றுள்ளது.
15 ஆண்டுகளில் முதல் முறை:
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்து ஒயிட் வாஷ் செய்தது இலங்கை அணி. முன்னதாக கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி இதே காலே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், கடந்த 15 ஆண்டுகளில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி இலங்கை அணி சாதனை படைத்துள்ளது. ஆட்ட நாயகனாக இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க:வருண பகவான் வழிவிடுவாரா? இந்தியா - வங்கதேசம் டெஸ்டில் தொடரும் சிக்கல்! - Ind vs Ban 2nd test Delay