துபாய்:9வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்.4) மாலை 3.30 மணிக்கு துபாயில் நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ஸ்டாபானி டெய்லர் மட்டும் 44 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
துபாய் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு நன்றாக எடுபட்டது. தென் ஆப்பிரிக்க வீராங்கனை நோன்குலுலேகோ ம்லபா அதிரடியாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து மரிசான் கேப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தொடர்ந்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்க மகளிர் களமிறங்கினர்.