தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்.. தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தது! - T20 World CUP 2024

T20 World CUP 2024: வெஸ்ட் இண்டீஸ் எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா வீரர்கள்(கோப்புப்படம்)
தென் ஆப்பிரிக்கா வீரர்கள்(கோப்புப்படம்) (Credits - AP Photos)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 12:12 PM IST

ஆன்டிக்வா: ஆன்டிக்வாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது. இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டி என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜான்சென் வீசிய முதல் ஓவரில் ஹோப் டக் அவுட்டானார். அடுத்த ஓவரில் அதிரடி வீரர் பூரன், சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு மார்க்ரம் பந்தில் 1 ரன்னுக்கு அவுட்டானார். இதனைதொடர்ந்து ஜோடி சேர்ந்த மேயர்ஸ், சேஸ் ஜோடி பொறுமையாக ஆடியது.

சேஸ் ஒரு ரன் எடுத்திருந்த போது, நார்க்கியா கேட்ச்சை தவறவிட்டார். பின்னர் கண்டம் தப்பிய சேஸ் அதிரடியாக ஆடினார். மேயர்ஸ் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷம்சி பந்தில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய பவல் (1), ரூதர்ஃபோர்டு (0) அடுத்தடுத்து அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து ஆட்டம் கண்டது. பின்னர் களமிறங்கிய வீரர்கள் ரஸல் (15), ஹொசின்(6) சொற்ப ரன்களுக்கு அவுட்டாக, சேஸ் 52 ரன்களுக்கு வெளியேறினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் எடுத்தது.

எளிதான இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு டி காக் அதிரடியான தொடக்கம் கொடுத்தார். முதல் ஓவரில் டி காக் 3 பவுண்டரிகள் அடித்த நிலையில், ஹெண்டிரிக்ஸ் டக் அவுட்டானார். அவரை தொடர்ந்து டி காக் 12 ரன்களுக்கு அவுட்டானார். இந்நிலையில் மழை குறுக்கிட்டது.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு டக் வொர்த் லூயிஸ் (DLS) முறைப்படி 17 ஓவர்களில் 123 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கிய நிலையில், மார்க்ரம் 18 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் களமிறங்கிய கிளாசென் அதிரடியாக ஆடத் தொடங்கிய நிலையில் 22 ரன்களுக்கு ஜோசஃப் பந்தில் அவுட்டானார்.

அதிரடி ஆட்டக்காரர் மில்லரும் 2 ரன்களுக்கு நடையை கட்டினார். ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் பொறுமையாக ரன்கள் சேர்த்த ஸ்டப்ஸ் 29 ரன்களுக்கு அவுட்டாக தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்கள் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் பக்கம் போட்டி திரும்பிய நிலையில், ஜான்சென் அதிரடியாக ரன்கள் சேர்த்தார்.

கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட நிலையில், மெக்காய் முதல் பந்தை வீச, ஜான்சென் லாங் ஆனில் சிக்ஸ் அடித்து தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென் ஆப்பிரிக்கா இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஏற்கனவே குரூப் 2இல் அமெரிக்காவை இங்கிலாந்து அணி எளிதாக வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உலகக் கோப்பை ஃபைனலுக்கு பழிதீர்க்குமா இந்தியா? - வாழ்வா, சாவா போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதல்! - T20 WORLD CUP 2024

ABOUT THE AUTHOR

...view details