ஐதராபாத்:20 ஓவர் உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் தான் இந்த சாதனை படைக்கப்பட்டு உள்ளது. ஆசிய ஓசியானா கடற்பகுதியில் உள்ள குட்டி நாடு தான் சமோவா. அந்நாட்டை சேர்ந்த டேரியஸ் விசர் இந்த சாதனையை படைத்துள்ளார். டேரியஸ் விசர் ஒரு ஓவரில் 6 சிக்சர் உள்பட 39 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் டேரியஸ் விசர். இதற்கு முன் 2007ஆம் ஆண்டு யுவராஜ் சிங், 2021ஆம் ஆண்டு கிரென் பொல்லார்ட், 2024ஆம் ஆண்டு திபேந்திர சிங் ஏரீ, அதே ஆண்டில் நிகோலஸ் பூரான் ஆகியோர் டி20 பார்மட்டில் ஒரே ஓஒவரில் 36 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் அனைவரது சாதனையையும் டேரியஸ் விசர் தவுடுபொடியாக்கி புது உலக சாதனையை படைத்துள்ளார். மேலும், அந்த ஆட்டத்தில் 62 பந்துகளில் 132 ரன்களை டேரியஸ் விசர் எடுத்துள்ளார். இதன் மூலம் சமோவா நாட்டின் தரப்பில் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் வீரர் என்ற புது சாதனையையும் டேரியஸ் விசர் படைத்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் அதே ஓசியானா கடற்பகுதியில் உள்ள வனுவாடு என்ற நாட்டுக்கு எதிராக டேரியஸ் விசர் இந்த ரன்களை குவித்துள்ளார். இந்த ஆட்டத்தின் இறுதியில் சமோவா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய வனுவாடு, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சீக்கிரமாக வெளியேறியது.