கோவை: கோவை விமான நிலையம் அருகில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டிஎன்பில் தொடரில் பங்குபெறும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்திய கிரிக்கெட் வீரர்களான நடராஜன், சாய் கிஷோர், விஜய்சங்கர், அணியின் உரிமையாளர் ரிஷிகேஷ் ஸ்ரீராம் மூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய அணியின் உரிமையாளர் ரிஷிகேஷ் ஸ்ரீராம் மூர்த்தி, “இந்த அணியின் கேப்டன் விஜய்சங்கருக்கு கடைசி ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டதால் சாய் கிஷோரை புதிய கேப்டனாக நியமிப்பதாக தெரிவித்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் தற்பொழுது நன்கு விளையாடி வருவதாக தெரிவித்த அவர், ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருந்து ஆண் விளையாட்டு வீரர்கள் எப்படி முன்னேறி நாட்டிற்காக விளையாடுகிறார்களோ, அதே போன்று பெண்களுக்கும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்த TNC முன்னெடுப்பை எடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
விஜய் சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உடலில் காயம் ஏற்பட்டதால் சில தினங்களுக்கு விளையாட முடியாது எனவும், இனி வரும் நாட்களில் சாய் கிஷோர் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவார் எனக் கூறினார். மேலும், அணியில் உள்ளவர்கள் தாமாக பொறுப்பேற்றுக் கொண்டு விளையாடினேலே போதுமானது" என தெரிவித்தார்.
சாய் கிஷோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்த அணியை இதற்கு முன்னால் இருந்தவர்கள் நன்கு வழிநடத்திச் சென்று உள்ளார்கள் எனவும், அணியில் திறமையான மூத்த வீரர்கள் இருப்பதால் தனக்கு கிடைத்த அனுபவங்களையும் திறமைமிக்க வீரர்களையும் கொண்டு இந்த அணியை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், விளையாட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி சேலஞ்சு இருந்தால் தான் கிக் இருக்கும் என தெரிவித்த அவர், அனைத்தும் எளிதாக இருந்தால் திறமை தேவைப்படாது எனக் கூறினார். மேலும், கோயம்புத்தூர் எப்பொழுதும் அதிர்ஷ்ட இடமாக இருந்து உள்ளதாகவும், கண்டிப்பாக இங்கு ஒரு நல்ல வைப்ரேஷன் இருக்கும் என தெரிவித்தார்.