சென்னை: அமலாக்கத்துறையினர் முடக்கிய சொத்துக்களில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருவாய் ஈட்டி வந்ததாக எழுந்த புகாரில் அந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
சென்னை, தூத்துக்குடி, மதுரை ஆகிய மூன்று இடங்களில் உள்ள ரூ.1.26 கோடி மதிப்புடைய அசையா சொத்துக்களை பண மோசடி தடுப்புச் சட்டம் (PMLA) 2002-இன் கீழ் அமலாக்கத்துறையினர் முடக்கியதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பண மோசடியில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையின் செய்திக்குறிப்பு கூறுகிறது. திமுக ஆட்சியில் இருந்த 2006 காலகட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஊழல் தடுப்புப் பிரிவுகள் 13(2) r/w 13(1)(e), 1988-இன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில், வருவாய்க்கு அதிகமாக சுமார் 2.7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேர்த்ததாக சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது 2022 ஆம் ஆண்டில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 18 அசையா சொத்துகளை இந்த வழக்கில் இணைத்தது.
மேலும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்த வழக்கு தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து அமைச்சர் மற்றும் குடும்பத்தினர் லாபம் ஈட்டியதாக புகார் எழுந்தது. இதை மதிப்பிட்ட அமலாக்கத்துறையினர், ரூ.17.74 கோடி ரூபாய் வரை முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து வருவாய் ஈட்டியிருப்பதைக் கண்டுபிடித்ததாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: மரணத் தண்டனை விதிக்கப்பட்ட நபரிடம் விசாரணை: காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த உத்தரவு!
மேலும், லாபமாக கிடைத்த பணத்தில் அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், முடக்கப்பட்ட சொத்துக்களின் வாயிலாகக் கிடைத்த வருவாயைக் கொண்டு அமைச்சர் தரப்பு தாங்கள் வாங்கிய கடனை ரொக்கமாக கொடுத்து அடைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 23) அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உத்தரவிட்டுள்ளது.