ஸ்ரீநகர்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் ஜாம்பாவானுமான சச்சின் டெண்டுல்கர் இன்று (பிப்.17) ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அவர் புல்வாமா மாவட்டம், செர்சூ பகுதியில் உள்ள கிரிக்கெட் பேட் தயாரிக்கும் எம்ஜே ஸ்போர்ட்ஸ் தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்.
அதோடு அங்கு உள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும், இந்த உரையாடலின் போது சச்சின் டெண்டுல்கர் வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் முக்கியத்துவத்தையும், அவர்களின் செயல்திறனில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் சச்சின் டெண்டுல்கருடன் அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மகள் சாரா டெண்டுல்கர் இருந்தனர்.
இதற்கிடையில் சச்சின் டெண்டுல்கர், பாரா கிரிக்கெட் வீரர் அமீர் ஹுசைன் லோனை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தில் தனது கைகளை இழந்த அமீர் கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் தோள்பட்டை இடையே பேட்டிங் செய்தும், காலில் பந்து வீசியும், பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்தவர்.