டெல்லி:17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிளைமாக்ஸ் காட்சியை நெருங்கி உள்ள நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை எந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் அடுத்த வரும் ஆட்டங்கள் அனல் பறக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் ஒரு ஆட்டத்தில் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த மே 7ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொண்டன.
இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஒதுக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் கூடுதலாக பந்துவீச நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை இது போன்று பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதாக டெல்லி அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் அதே தவறு தொடர்ந்த நிலையில், ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகளை மீறியதாக கூறி டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பன்ட்க்கு அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.