ஐதராபாத்: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமாகினார். தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடினார்.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான துலிப் டிராபி தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மொத்தம் உள்ள நான்கு அணிகளிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், துலிப் டிராபி தொடரில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படாதது சமூக வலைதளத்தில் பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தி உள்து. பலரும் அவருக்கு ஆதரவாகவும், தேர்வுக்கு குழு உறுப்பினர்களுக்கு எதிராகவும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், துலிப் டிராபி தொடரில் தனக்கு என்ன காரணத்திற்காக வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பது குறித்து ரிங்கு சிங்கே மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், கடந்த தொடரில் தான் சிறப்பாக செயல்படாததன் காரணமாகவும், ரஞ்சி கோப்பை பெரும்பாலான ஆட்டங்களில் விளையாடாததன் காரணமாகவும் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். நடப்பு ரஞ்சி சீசனில் ஒன்று இரண்டு ஆட்டங்கள் மட்டுமே விளையாடியதாகவும், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சரிவர விளையாடாததால் கூட தன்னை அணியில் சேர்க்காமல் இருந்திருக்கலாம் என்றும் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அடுத்த சுற்று ஆட்டங்களில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் ரிங்கு சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன்னை தக்க வைக்க விரும்பாத பட்சத்தில் தனது விருப்பமான அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாட விரும்புவதாக ரிங்கு சிங் தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்திய அணியின் ஒப்பந்தமாகி உள்ள பெருவாரியான வீரர்கள் துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றனர். ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் துலிப் கோப்பை தொடரில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக்கை வைத்து ரூ.16 கோடி வருமானம் பார்த்தாரா வினேஷ் போகத்? உண்மை என்ன? - Vinesh Phogat prize money