ஐதராபாத்: ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கும் நிலையில், சிஎஸ்கே அணி தரப்பில் 5 வீரர்களை மொத்தமாக தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மெகா ஏலத்தில் சில வீரர்களை ரிலீஸ் செய்து ரிஸ்க் எடுக்க சென்னை அணி நிர்வாகம் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க அணிகளுக்கு இன்னும் 4 நாட்களே கெடு இருக்கிறது. இதனால் பல்வேறு அணிகளும் தங்களின் வீரர்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை அணி நிர்வாகமும் சில ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
மீண்டும் தோனி:
அதேபோல் தோனியும் அடுத்த சீசனில் விளையாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 2 நாட்களில் கோவாவில் இருந்து தோனி ராஞ்சிக்கு வரவுள்ளார். அதன்பின் சென்னை அணி நிர்வாகிகள் அவருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது தோனிக்கு எந்த ஒப்பந்தம் தேவை என்பது குறித்த ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் குறைந்த தொகையான ரூ.4 கோடிக்கு அன்-கேப்ட் வீரராக தோனியை ஒப்பந்தம் செய்ய சென்னை அணி நிர்வாகம் விரும்பும் எனக் கூறப்படுகிறது. அதற்காக தான் சென்னை அணி நிர்வாகம் அன்-கேப்ட் வீரருக்கான விதிமுறையை மாற்ற பிசிசிஐயிடம் கோரி இருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.18 கோடி ஒப்பந்தம் கொடுக்கவும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.18 கோடி ஒப்பந்தம் கொடுக்கவும் சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பதிரனாவுக்கு மவுசு:
அதேபோல் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரனாவுக்கு ரூ.14 கோடி ஒப்பந்தம் அளிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் பதிரனாவின் மேலாளர் சென்னை வந்திருந்தார். அப்போது இன்னும் சில நாட்களில் நல்ல செய்தி வெளியாகும் என்று எக்ஸ் தளத்தில் மஞ்சள் நிறத்திலான இதயம் ஒன்றையும் பதிவிட்டு இருந்தார்.
இதனால் பதிரனா தக்க வைக்கப்படுவது நிச்சயம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ஆர்டிஎம் கார்டு பயன்படுத்தலாம் என்றாலும், சென்னை அணி நிர்வாகம் எந்த ரிஸ்கையும் எடுக்க விரும்பவில்லை என தகவல் கூறப்படுகிறது. ஏனென்றால் ஆர்டிஎம் கார்டு காட்டப்பட்ட பின்னரும், ஏலத்தில் விலையை மாற்ற ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்படும். இதனால் பதிரனா போன்ற வீரருக்கு வேண்டுமென்றே சில அணிகள் ஏலத்தில் விலையை ஏற்றிவிடலாம் எனக் கூறப்படுகிறது.
ஷிவம் துபே நிலை என்ன?:
அதேபோல் ஷிவம் துபே விவகாரத்தில் சென்னை அணி நிர்வாகம் ரிஸ்க் எடுக்க வாய்ப்பில்லை என் சொல்லப்படுகிறது. அணியில் 4வது இடத்தில் களமிறங்கி ஸ்பின்னர்களை பொளக்க கூடிய பேட்ஸ்மேனான ஷிவம் துபே, கடந்த 3 சீசன்களாக மிகப் பெரிய அளவில் விளையாடி வருகிறார். இந்திய அணியிலும் தொடர்ந்து விளையாடி வரும் அவருக்கு ரூ.11 கோடி ஒப்பந்தம் கொடுக்க சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிகபட்சம் ஒரேயொரு ஆர்டிஎம் கார்டுடன் மெகா ஏலத்தில் பங்கேற்க சென்னை அணி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரேயொரு ஆர்டிஎம் கார்டு மூலம் ரச்சின் ரவீந்திரா, கான்வே அல்லது ரிஸ்வி உள்ளிட்ட வீரர்களில் ஒருவரை வாங்க சென்னை அணி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க:இந்திய அணியின் பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்! அப்ப கம்பீர் கதை?