மும்பை: ரஞ்சி கோப்பை 2024 தற்போது நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டிகள் நாளை தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு அணி மும்பை அணியையும், விதர்பா அணி மத்தியப் பிரதேச அணியையும் எதிர்கொள்கிறது. இந்த நிலையில்தான், தமிழ்நாடு அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக தனது மும்பை அணிக்கு திரும்பியுள்ளார்.
சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்தத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாமல் இருந்தார். பிசிசிஐ எச்சரித்து, தொடர்ந்து அவர் தேவையின்றி உள்ளூர் போட்டிகளை தவிர்த்ததே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்த சூழலில், ஸ்ரேயாஸ் ஐயர் அதனை சரி செய்வதற்கு முன் வந்துள்ளார்.
நாளை அரையிறுதி போட்டி நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக மும்பை அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஸ்ரேயாஸ் ஐயர் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் மும்பை அணிக்கு விளையாடிய போதெல்லாம் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். அவருக்கு எந்த அறிவுரையோ, ஊக்கமோ தேவையில்லை என நினைக்கிறேன். அரையிறுதிக்கு முன்பாக அவர் அணியில் சேர்ந்தது, அணியின் மீதான கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் 6 போட்டிகளில் விளையாடி, வெறும் 115 ரன்கள்தான் சேர்த்துள்ளேன். இது ஒரு மோசமான சூழல்தான். சில நேரங்களில் தொடர்ந்து நல்ல ரன்களை சேர்ப்பது போல், தொடர்ந்து ரன்கள் சேர்க்க முடியாமலும் போகும். அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். மேலும், எனது அடிப்படையை நான் சிறப்பாக செய்து வருகிறேன்" என்றார்.