ஜெய்ப்பூர்:17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் இன்று (மார்ச்.24) மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் விளாசினார். அடித்து ஆடிய சாம்சன் அணியின் ஸ்கோர் 190 ரன்களை தாண்ட முக்கிய காரணியாக அமைந்தார். அதேபோல் மற்றொரு வீரர் ரியான் பராக் 43 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோர் நல்ல நிலை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்தார்.
194 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அதிரடி ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தேவதூத் படிக்கெல் டக் அவுட்டாகி வந்த வேகத்தில் நடையை கட்டினார்.
ஒருபுறம் கேப்டன் கே.எல் ராகுல் போராடிக் கொண்டு இருக்க மறுபுறம் சீட்டுக் கட்டு போல் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. ஆயுஷ் பதோனி 1 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் லக்னோ அணிக்கு நெருக்கடியான சூழல் நிலவியது. இதனிடையே நீண்ட நேரம் போராடிக் கொண்டு இருந்த கே.எல் ராகுலும் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் லக்னோ அணி வெற்றி பெறும் வாய்ப்பு மிகக் குறுகியதானது. கடைசி கட்டத்தில் களமிறங்கிய நிகோலஸ் பூரன் மட்டுமே அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு தீபக் ஹூடா (26 ரன்) சிறிது நேரம் ஒத்துழைப்பு வழங்கினார். இருப்பினும் இந்த கூட்டணியால் அணியை கரை சேர்க்க முடியவில்லை.
20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்கியது. ராஜஸ்தான் அணியில் டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டும், நன்ட்ரே பர்கர், அஸ்வின், சந்தீப் சர்மா ஆகியோ தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க :MI Vs GT: மும்பை பந்துவீச்சு தேர்வு! குஜராத் - மும்பை அதிரடி சரவடி ஆரம்பம்! - MI VS GT