பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 10,500 வீரர் வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இதில் இந்தியாவின் சார்பில் 16 விதமான போட்டிகளில் மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பி.வி.சிந்து அபாரம்: பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் லீக் சுற்று போட்டி இன்று நடைபெற்றது. அதில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹா ஆகியோர் மோதினர். பிவி சிந்துவைப் பொறுத்தமட்டில் இந்தியாவிற்காக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். அடுத்ததாக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்தை பெற்று அசத்தினார். இதன் காரணமாக பி.வி.சிந்து மீது நடப்பு பாரிஸ் ஒலிம்பிக்கில் அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய பி.வி. சிந்து இந்த ஆட்டத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பாத்திமா நபாஹாவை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் பிவி சிந்து தனது முதல் செட்டை 21-9 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதற்கு அடுத்தப்படியாக தனது இரண்டாவது செட்டை 21-6 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றியை பதிவு செய்தார். இதனையடுத்து வருகின்ற 31ஆம் தேதி பிவி சிந்து தனது இரண்டாவது போட்டியில் தரவரிசையில் 73வது இடத்தில் இருக்கும் எஸ்தோனியா நாட்டை சேர்ந்த கிறிஸ்டின் குபாவை சந்திக்கவுள்ளார்.