ஐதராபாத்: 11வது புரோ கபடி தொடர் வரும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. கடந்த சீசனில் புனேரி பால்டன் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
11வது சீசனில் நடப்பு சாம்பியன் புனேரி பால்டன், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுகு டைட்டன்ஸ், யு மும்பா, உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.
ஐதராபாத்தில் போட்டி:
இந்த வருடம் மூன்று நகரங்களில் புரோ கபடி போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 9 வரை ஐதராபாத்திலும், அதைத் தொடர்ந்து நவம்பர் 10 முதல் டிசம்பர் 1ஆம் தேடி வரை நொய்டா உள்விளையாட்டு அரங்கிலும், மூன்றாவது மற்றும் கடைசி கட்ட போட்டிகள் டிசம்பர் 3 முதல் 24ஆம் தேதி வரை புனேவிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
அக்டோபர் 18ஆம் தேதி முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் - பெங்களுரு புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதைத் தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தில் யு மும்பா - தபாங் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. லீக் ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் புள்ளிப் பட்டியல் அடிப்படையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
8 வீரர்கள் ரூ.1 கோடிக்கு மேல்:
பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என புரோ கபடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் புரோ கபடி வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக 8 வீரர்கள் 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஏலம் போயினர்.
இந்த ஆண்டு புரோ கபடி லீக் தொடரை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டலில் வெளியிடும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸடார் கைப்பற்றி உள்ளது. ரசிகர்கள் புரோ கபடி லீக் ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மூலம் தொலைக்காட்சியிலும், டிஜிட்டலில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மூலமாக கண்டு களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஓரங்கட்டப்படும் முகமது ஷமி, ஸ்ரேயாஸ்! இது தான் உண்மை காரணமா? - Ind vs Ban 1st Test Cricket