சென்னை:விளையாட்டு உலகின் திருவிழா என்று அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26ஆம் தேதி கோலகலமாக தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
குறிப்பாக இந்தியாவில் இருந்து இதுவரை 117 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் ஷாட் கன் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரது தலைமையில் ஒலிம்பிக் தொடருக்கான 5 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பிரித்விராஜ் தொண்டைமான்?1987 ஜூன் மாதம் 6ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தவர் பிருத்விராஜ் தொண்டைமான் (37). இவர் புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் மற்றும் திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் ராணி சாருபாலா தொண்டைமான் ஆகியோரது மகனாவார்.
அவரது தந்தை ராஜகோபால் தொண்டைமான் டபுள் டிராப் மற்றும் ஸ்கீட் பிரிவில் சிறந்த வீரர். தந்தையை போலவே அவரின் வழிகாட்டுதலில் பிரித்விராஜ் தொண்டைமான் ஷாட்கன் டிராப் பிரிவில், பல்வேறு விருதுகளை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.
பிரித்விராஜ் தொண்டைமான் சாதனைகள்:
- இத்தாலியின் லோனாடோவில் நடைபெற்ற ISSF (சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு) உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் ட்ராப் போட்டியில் வெண்கலம் வென்றார். இதன் மூலம் அந்த போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் பெருமையும் பெற்றார்.
- அதேபோல் கத்தார் நாட்டின் தோகாவில் நடந்த ISSF உலகக் கோப்பை போட்டியில் ஷாட்கன் பிரிவில் வெண்கலம் வென்று மீண்டும் சாதனை படைத்தார்.
- 2022ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
- துப்பாக்கி சுடுதல் போட்டியில் உலகத் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளார்.
ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள பிரித்விராஜ் தொண்டைமான், நடப்பு ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான பங்களிப்பை வழங்கி இந்தியாவிற்காக பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒலிம்பிக் கனவை நனவாக்குவேன் :முன்னதாக ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டியளித்து இருந்த பிரித்விராஜ் தொண்டைமான் கூறியதாவது, "உலக கோப்பை போட்டியில் பங்கேற்று 2 பதக்கங்களை பெற்றுள்ளேன். அப்போது 300க்கும் மேற்பட்ட உலகின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களை எதிர்கொண்டேன்.
ஒலிம்பிக் போட்டியில் 30 வீரர்களைத்தான் எதிர்கொள்ளப் போகிறேன். அவர்கள் மிகவும் சிறந்த விளையாட்டை நிரூபிக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு இணையாகப் போட்டிப் போட்டு கட்டாயம் என் ஒலிம்பிக் கனவை நனவாக்குவேன். அதற்கான முழு உழைப்பையும் செலுத்தி வருகிறேன்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆர்வம், திறமை இருக்கு! தமிழ்நாட்டில் துப்பாக்கி பயிற்சிக்களம் இல்லை! - ஒலிம்பிக் தமிழனின் பிரத்யேக பேட்டி!