ஐதராபாத்: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை தேற்றும் வகையில் பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன, நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்.
இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம், நீங்கள் நெகிழ்ச்சித் தன்மையை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு.
வலுவாக திரும்பி வாருங்கள், நாங்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீதான பாலியல் புகார் குறித்து வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக எம்பியை நீக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் போது அதை நோக்கி டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பேரணியாக சென்ற போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்ட நிலையில், இன்று (ஆக.7) இரவு தங்கப் பதக்கத்திற்கான இறுதி போட்டியில் விளையாட இருந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.