ஐதராபாத்:அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கராச்சி, ராவல்பின்டி ஆகிய இடங்களில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளில் அந்நாட்டு கிரிக்கெட் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதேநேரம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்து உள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையில் நடத்தக் கோரி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தரப்பில் கடிதம்:
இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணியை தங்கள் நாட்டுக்குள் வரவைப்பதை குறியாக கொண்டு செயல்படுவது போல் தெரிகிறது. இதனிடையே பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இந்திய அணி வராது என்பது குறித்து ஐசிசி தரப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்தும் திட்டமே இல்லை என தெரிவித்து இருந்தார். மேலும் இந்தியாவை சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தானில் விளையாட வைப்பது குறித்து அந்நாட்டு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது.
65 மில்லியன் டாலர் நிதி இழப்பு:
இந்நிலையில், பாகிஸ்தான் அணியை சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதில் இருந்து திரும்பப் பெறுவதும், சாம்பியன்ஸ் கோப்பை தொடரை புறக்கணிக்க வைப்பது குறித்தும் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை புறக்கணிக்கும் நிலையில் பெரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் எனக் கூறப்படுகிறது.
ஒருவேளை பாகிஸ்தான் அணியை சாம்பியன்ஸ் கோப்பை தொடரை புறக்கணிக்கும் நிலையில், போட்டியை நடத்துவதற்கான மொத்தக் கட்டணம், அது தவிர்த்து 65 மில்லியன் அமெரிக்க டாலர் பணம், வருங்காலங்களில் ஐசிசியால் வழங்கப்படும் நிதி உதவிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இழக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.
ஹைபிரிட் மாடல் முடிவில் பாகிஸ்தான்?:
பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாட முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்துவது தவிர்த்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு வேறு வழியில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம் ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டால் முழு கட்டணம் மற்றும் மெஜாரிட்டி போட்டிகளை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து தற்போது வரை பிசிசிஐ மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:எம்.எஸ் தோனிக்கு நோட்டீஸ்! உயர் நீதிமன்றம் அதிரடி! High Court Issue notice to MS Dhoni!