டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி சொந்த நாடு திரும்பிய நிலையில், டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தின் முன் திரண்ட நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மேள தாளங்கள் முழங்க வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை இந்திய ஹாக்கி அணியின் முதல் பகுதி வீரர்கள் நாடு திரும்பிய நிலையில், மீதமுள்ளவர்கள் பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் கலந்து கொண்டு விட்டு இன்று நாடு திரும்பினர். நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணியின் நாயகன் கேரளாவை சேர்ந்த கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், அபிஷேக் நயின், அமித் ரோகிதாஸ், சஞ்சய் உள்ளிட்ட வீரர்கள் இன்று நாடு திரும்பினர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், "நாங்கள் கடந்த முறையும் வெண்கலம் வென்றோம், இதை நாங்கள் வழக்கமாக வைத்துள்ளோம், ஓய்வு பெறுவது என்பது ஒரு பயணத்தின் முடிவு. ஆனால் ஒருவர் வெளியேறினால், பலர் வீரர்கள் உள்ளே வருவார்கள். என் அணி எனக்காக விளையாடியதில் மகிழ்ச்சி மற்றும் நான் பதக்கத்துடன் வெளியேறுகிறேன்" என்று தெரிவித்தார்.