ஐதராபாத்: பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
140 ரன்களில் ஆல் அவுட்:
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 31.5 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. தொடக்க முதலே ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சொதப்பி வந்ததால் ஆட்டம் பாகிஸ்தான் வசம் மிக எளிதாக சென்றது. தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் (22 ரன்), ஆரோன் ஹார்டி (12 ரன்), சீன் அபோட் (30 ரன்), ஆடம் ஜம்பா (13 ரன்), ஸ்பென்சர் ஜான்சன் (12 ரன்) ஆகியோர் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
ஆஸ்திரேலிய அணியில் மொத்தம் 5 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழ்ந்து ஏமாற்றம் அளித்தனர். பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாள்ர்கள் ஷாகீன் அப்ரிடி மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதேபோல், முகமது ஹசனைன் 1 விக்கெட்டும் ஹரிஸ் ரவுப் 2 விக்கெட்டும் வீழ்த்தி அணிக்கு வலு சேர்த்தனர்.
பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் அதிரடி:
தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் சயிம் அயுப் மற்றும் அப்துல்லா ஷபீக் சிறப்பாக விளையாடி நல்ல தொடக்க அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 84 ரன்கள் குவித்தது. அப்துல்லா ஷபீக் 37 ரன்கள் இருந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் லான்ஸ் மோரீசின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் சயிம் அயுப்பும் (42 ரன்) ஆட்டமிழந்தார். இந்நிலையில், கூட்டணி அமைத்த பாபர் அசாம் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். நிதானமாக விளையாடிய இருவரும் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக் கோட்டுக்கு அனுப்பு துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் புது மைல்கல்:
இறுதியில் 26.5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபர் அசாம் (28 ரன்), முகமது ரிஸ்வான் (30 ரன்) கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். மேலும் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி 2-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஏற்கனவே அந்த அணி அடிலெய்டில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பாகிஸ்தான் அணி 22 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலியா மண்ணில் வைத்து ஒருநாள் தொடரை கைப்பற்றி புது மைல்கல் படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Champions Trophy 2025 shifted: இடம் மாறும் சாம்பியன்ஸ் கோப்பை? போட்டி போடும் 2 நாடுகள்? யாருக்கு வாய்ப்பு!